நால்வர் பெருமக்கள் (நினைவில் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள்):

திருஞானசம்பந்தர்:

அவதாரத் தலம் சீர்காழி, 3ஆம் வயதின் துவக்கத்தில் சீகாழி இறைவரான பிரம்மபுரீஸ்வரப் பரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்று, அம்பிகையிடமிருந்து  சிவஞானப் பாலினைப் பெற்று அருந்திய தனிப்பெரும் குருநாதர். காலம் 7ஆம் நூற்றாண்டு, அவதாரக் காலம் 16 ஆண்டுகள். தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளையும், உமா தேவியாரையும் அம்மையப்பராகப் போற்றி வழிபடும் சத்புத்திர மார்க்கத்தின் நெறி பேணிய அருளாளர். நாவுக்கரசு சுவாமிகளின் சமகாலத்தவர். முதல் மூன்று சைவத் திருமுறைகளின் ஞானாசிரியர். முத்தித் தலம் ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணம், சிவமாம் பேறு பெற்றுய்ந்த திருநட்சத்திரம் வைகாசி மூலம்.

திருநாவுக்கரசர் (அப்பர்):

அவதாரத் தலம் கடலூர் மாவட்டம் - பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் (திருவாரூர் மாவட்டத்திலுள்ள  திருவாய்மூருக்கும் இத்தலத்திற்கும் சிறிது பெயர் ஒற்றுமை இருப்பினும், இரண்டும் வெவ்வேறு தலங்கள்). சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவதிகை. காலம் 7ஆம் நூற்றாண்டு, ஞான சம்பந்த மூர்த்தியின் சமகாலத்து அருளாளர். அவதாரக் காலம் 81 ஆண்டுகள்.
பன்னிரு சைவத் திருமுறைகளுள் 4, 5, 6 திருமுறைகளின் ஞானாசிரியர். தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளைத் தலைவராகவும், தன்னைத் தொண்டராகவும் கொண்டு வழிபடும் தாச மார்க்கத்தின் வழிநின்ற அருளாளர். சமயக் குரவர் நால்வருள் ஒருவராகப் போற்றப் பெறும் தனிப்பெரும் குருநாதர். இயற்பெயர் மருள் நீக்கியார், திருவதிகை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் திருநாவுக்கரசர், ஞான சம்பந்த வள்ளல் பெருமதிப்புடன் அழைத்து மகிழ்ந்த  திருப்பெயர் 'அப்பர்'. திருக்கயிலைப் பதம் எய்திய திருநட்சத்திரம் சித்திரை சதயம், முத்தித் தலம் திருப்புகலூர்.

சுந்தரர்: 

அவதாரத்திற்கு முன்னமே திருக்கயிலையில் அணுக்கத் தொண்டராய் நிலைபெற்றிருந்த, வரம்பிலா தவமுடைய அருளாளர். அவதாரத் தலம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருநாவலூர், ஆதிப்பரம்பொருளான சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் (திருநாவலூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள) திருவெண்ணெய்நல்லூர். 

பன்னிரு சைவத் திருமுறைகளுள் 7ஆம் திருமுறையின் ஞானாசிரியர். காலம் 7ஆம் நூற்றாண்டின் இறுதியும் 8ஆம் நூற்றாண்டின் துவக்கமும். வேத முதல்வரான சிவமூர்த்தியிடம் மீளா அடிமைத்திறம் பூண்டு, தோழமை உணர்வொடு பக்தி புரிந்து வழிபடும் தனித்துவமான 'சக மார்கத்தின்' நெறி பேணிய தகைமையாளர். திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தின் காவிய நாயகர் (பாட்டுடைத் தலைவர்).

தம்பிரான் தோழருக்குத் தேவியர் இருவர் (பரவையார்; சங்கிலி நாச்சியார்), கோட்புலி நாயனாரின் புதல்வியரைத் தம்முடைய குழந்தைகளாகவே ஏற்றருளிய தன்மையினால் நம் நம்பிகளுக்குப் புதல்வியரும் இருவர் (சிங்கடி; வனப்பகை).  

வன்தொண்டனார்க்குத் தோழரும் இருவர், பிரதானத் தோழர் 'சேரமான் பெருமாள் நாயனார்' என்றிருப்பினும், நம் நம்பிகள் சோமாசி மாற நாயனாரிடமும் அரியதொரு தோழமை பூண்டிருந்தார் ('அணுக்க வன்தொண்டர்க்கு அன்பால் சாரும் பெருநண்பு சிறப்ப' என்றிதனைத் தெய்வச் சேக்கிழார் சோமாசி மாற நாயனார் புராணத்தின் 4ஆம் திருப்பாடலில் குறித்தருளியுள்ளார்). 

அடியவர்களைத் தொகுத்துப் போற்றும் திருத்தொண்டத் தொகையினை அருளிச் செய்த பெருஞ்சிறப்பினால், திருக்கயிலையிலிருந்து, சிவமூர்த்தியின் அருளாணையால், (அம்மையப்பர்; விநாயகப் பெருமான்; கந்தக் கடவுள் ஆகியோர் மட்டுமே ஆரோகணித்தருளும்) ஈராயிரம் தந்தங்களைக் கொண்ட அயிராவணம் எனும் வெள்ளை யானையில், மாலயனாதி வானவர்கள் யாவரும் எதிர்கொண்டு போற்றும் தன்மையில், அரியதொரு வரவேற்பு பெற்ற தனிச்சிறப்பு நம் சுந்தரனாருக்கு மட்டுமே உரித்தானது.  

அவதாரக் காலம் 18 ஆண்டுகள், முத்தித் தலம் (கேரள தேசத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள) திருஅஞ்சைக்களம் (தற்கால வழக்கில் திருவஞ்சிக்குளம்). திருக்கயிலைப் பதம் பெற்றுய்ந்த திருநட்சத்திரம் ஆடி சுவாதி. 

மாணிக்கவாசகர்:

அவதாரத் தலம் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாதவூர். சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை. தேவார மூவரின் காலத்திற்கு மிகமுற்பட்ட 3ஆம் நூற்றாண்டு காலத்தவர். 8ஆம் திருமுறையான திருவாசகம் மற்றும் திருக்கோவையாரின் ஞானாசிரியர். இயற்பெயர் வாதவூரர் என்று கூறுவர், திருப்பெருந்துறை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் 'மாணிக்கவாசகர்'. அவதாரக் காலம் 32 ஆண்டுகள். முத்தித் தலம் தில்லை சிதம்பரம். சிவமுத்தி பெற்றுய்ந்த திருநட்சத்திரம் ஆனி மகம். 

திருஞானசம்பந்தரின் அவதார இரகசியம்:

சீகாழித் தோன்றலான நம் ஞான சம்பந்த வள்ளலைப் பொதுவில் முருகப் பெருமானின் அவதாரமாகவே போற்றும் சைவ சமய மரபு குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
முதற்கண் சம்பந்த மூர்த்தியின் அவதார இரகசியத்தை அவர்தம் திருப்பாடல் வரிகளைக் கொண்டே அறிந்துணர முற்படுவோம். பின்வரும் திருப்பாடலில் 'மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து) இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்றருளிச் செய்கின்றார் காழி வேந்தர்,  

('வரைத்தலைப் பசும்பொனோடு' என்று துவங்கும் திருத்துருத்தி தேவாரம் - திருப்பாடல் 5)
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்; திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்(டு)
இறக்குமாறு காட்டினாய்க்(கு) இழுக்குகின்ற(து) என்னையே

சிவபரம்பொருளின் குமார வடிவமே அறுமுகக் கடவுளெனும் சத்தியத்தைக் (கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள) கந்தபுராணத்தின் பல்வேறு திருப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. ஆதலின் மேற்குறித்துள்ள காழிப் பிள்ளையாரின் அற்புதப் பிரகடனத்தை ஒருபொழுதும் அறுமுகக் கடவுளின் திருவாக்காகக் கொள்ளுதல் ஏற்புடையதன்று. சிவஞானப் பெருநிலையில் விளங்கியிருந்த ஒரு ஜீவான்மா இறைவரிடம் உரிமையோடு 'என்னை ஏன் இப்பிறவியில் ஆழ்த்தினாய்' என்று வினவுமுகமாகவே சிவஞானச் செல்வரின் இக்கூற்று அமைந்துள்ளது.

(2)
இனி நம் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கும் சீகாழி அண்ணலின் அருளிச் செயலோடு ஓத்திருத்தலைக் காண்போம். 'திருவடி மறவாத் தன்மையில் விளங்கியிருந்த ஆன்மா ஒன்றினைச் சிவமூர்த்தி ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரிக்கச் செய்தருளினார்' என்ற பின்வரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

'திருவடி மறவாத தன்மை' எனும் சொற்பிரயோகமும் உயிர் வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடியவொன்று, பரம்பொருள் வடிவினரான குமாரக் கடவுளுக்கு அன்று. 

(3)
எனில் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்த மூர்த்தியின் திருஅவதார நிகழ்வுகளை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளாரே?' எனும் கேள்வியும் உடனெழுவது இயல்பே. 

இதற்கான விளக்கத்தினை நாம் ஆய்ந்தறிய முனைகையில், அவ்விளக்கமானது ஞானசம்பந்தரின் திருவாக்கு; தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கு; அருணகிரியாரின் திருவாக்கு ஆகிய மூன்றிற்கும் முரணின்றி அமைந்திருத்தல் மிகமிக அவசியம். 

பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் 'அறுமுகக் கடவுளின் சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையில் திருத்தொண்டாற்றி வரும் முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் ஞானசம்பந்தராக இப்புவிமிசை அவதரிக்கச் செய்கின்றார்' என்றும், 'இதன் பொருட்டே அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்கள், உபச்சார மார்க்கமாகச் சம்பந்தச் செல்வரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடியுள்ளனர்' என்றும் இதன் நுட்பத்தினைத் தெளிவுறுத்துகின்றார். 

(4)
மற்றொரு கோணம், பூரண சிவஞானம் சித்திக்கப் பெறாத ஆன்மாக்களிடம் பாலில்படுநெய் போலும் எழுந்தருளியுள்ள இறைவன், மலபரிபாகம்; சத்தினிபாதம் நிகழ்ந்தேறப் பெற்றுள்ள உத்தம ஆன்மாக்களிடம் மிக விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் சிவஞானப் பெருநிலையிலுள்ள நம் அருணகிரிப் பெருமான் ஒவ்வொருமுறை ஞானசம்பந்த மூர்த்தியை அகக் கண்களில் தரிசிக்கையிலும், அம்மூர்த்தியின் திருவுள்ளத்தில் மிக விளக்கமாய் எழுந்தருளியுள்ள அறுமுகக் கடவுளின் தரிசனமும் ஒருசேர அனுபவமாகின்றது. 

(5)
'ஞானசம்பந்தப் பெருமான் பசு வர்க்கமாகிய நம்முள் ஒருவர்' என்று அறிந்தும் உணர்ந்தும் அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம். சீர்காழிச் செல்வர் திருத்தொண்டர்களின் தனிப்பெரும் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைப்பிக்கும் தெய்வீகப் பாலமாய்த் திகழ்பவர் (சிவ சிவ)!!!.

திருஞானசம்பந்தர் (சைவச் செல்வரின் திருஅவதாரம்):

சமணமும் பௌத்தமும் ஆதிக்கம் பெற்று எங்கும் புறச்சமய இருள் சூழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு கால கட்டம். சமணர்கள் அந்தந்த பகுதிகளில் கோலோச்சும் அரசர்களைச் சமண நெறிக்கு உட்படுத்தி, அதன் வாயிலாக வைதீக மரபிற்கும், சைவ சமயத்திற்கும் எண்ணற்ற இடையூறுகளை விளைவித்து வருகின்றனர். சைவச் சின்னங்களும், வழிபாட்டு முறைகளும் பரிகசிக்கப் படுகின்றன, சமண பௌத்தக் கொள்கைகள் திணிக்கப் படுகின்றன, திருக்கோயில்களிலும் எவ்விதத் திருப்பணிகளும் நடந்தேறாத நிலை நிலவி வருகின்றது. 

சீர்காழியில் வாழ்ந்து வரும் 'சிவபாத இருதயர்' என்பார் இச்சூழலைக் கண்டு உளம் வெதும்புகின்றார், அனுதினமும் நியமத்துடன் தவமியற்றி 'பரசமய இடர் நீக்கித் திருநீற்று நெறியினைப் பரவச் செய்யும் ஒரு தவப் புதல்வனைத் தந்து அருள் புரிவாய் ஐயனே!' என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து வருகின்றார்.

சீர்காழி மேவும் திருத்தோணியப்பரின் திருவருளால் 'சிவபாதர் - பகவதியார்' தம்பதியருக்கு, ஒரு ஆதிரைத் திருநாளில், வைதீகமும் சைவமும் எண்திசைகளிலும் தழைத்தோங்கவும், பரசமய இடர் நீங்கவும், அடியவர்கள் வாழ்வு செழிக்கவும், தமிழ் வழக்கம் ஏற்றம் பெற்றுச் சிறக்கவும், குருநாதர்களுக்கெல்லாம் குருநாதராக, சைவச் செம்மலென சிவம் பெருக்கும் சம்பந்தப் பிள்ளையார் திருக்குமாரராய் அவதரிக்கின்றார்.

(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 1)
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

திருஞானசம்பந்தர் (சிவஞானப் பாலினை அருந்திய அற்புத நிகழ்வு):

அப்பொழுது சம்பந்த மூர்த்திக்கு 2 ஆண்டுகள் நிறைவுற்று 3ஆம் வயது துவங்கியிருந்தது. அன்று அதிகாலை வழக்கம் போல் சிவபாதர் தோணியப்பர் ஆலயத்திற்குப் புறப்பட முனைகின்றார். சம்பந்தர் தானும் உடன் வருவதாகத் தன் பிஞ்சுப் பொற்பாதங்களை மண்ணில் உதைத்து அடம் பிடிக்க, சிவபாதரும் சிவச்செல்வரைத் தோளில் சுமந்தவாறு ஆலயம் நோக்கிச் செல்கின்றார். பிரம்ம தீர்த்தப் படித்துறையில் பிள்ளையை அமர வைத்து, கோபுர சிகரத்தை நோக்கி 'ஆலமுண்ட பரம்பொருளே! நீயே இப்பிள்ளைக்குக் காவல்' என்று விண்ணப்பித்துப் பின் மந்திர உச்சாடனம் புரிய நீரில் மூழ்குகின்றார்.

சிறிது நேரம் செல்கின்றது, தந்தையைக் காணாத நிலையில் சம்பந்தர் சில கணங்களுக்குப் பிற இடங்களைப் பார்த்து அழுகின்றார். பின் இறுதியாய்த் தோணிபுர கோபுர உச்சியினை நோக்கி 'அம்மே! அப்பா!' என்று அழைத்தவாறே, கண்மலர்களில் நீர் ததும்ப, கை மலர்களால் பிசைந்துப் பொருமி அழத் துவங்குகின்றார். 
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 63)
மெய்ம்மேல்கண் துளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ
செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள!!!

திருவருள் கூடும் வேளையும் நெருங்க, சீர்காழி மேவும் செம்மேனிப் பரம்பொருளும் அம்பிகையும், கருவறையினின்றும் நீங்கி, இடபவாகனத்தில், பிரம்மதீர்த்தக் கரையருகில் எழுந்தருளி வருகின்றனர். உலகீன்ற உமையவள் சிவஞானப் பாலினை ஓர் பொற்கிண்ணத்தில் இட்டு 'குழந்தாய் இதனை அருந்துவாய்' என்று சம்பந்தப் பிள்ளையாரின் பிஞ்சுக் கரங்களில் அளித்துப் பேரருள் புரிகின்றாள்.

அதனை அருந்தும் சம்பந்தருக்கு அக்கணமே அருந்தவ முனிவர்களுக்கும்; தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் சித்திக்கப் பெறுகின்றது. நடந்தேறிய நிகழ்வுகள் எவையும் அறியாத நிலையில் சிவபாதர் நியமம் முடித்துக் கரைக்கு வருகின்றார். பேரருள் பெற்று நிற்கும் சிவமழலையின் திருவாயில் ஞானப் பாலின் மிச்சத்தினைக் கண்டு கோபம் கொள்வார் போல் 'யார் தந்த பால் இது' என்று கையில் சிறிய கோலொன்றினை அடிப்பது போல் ஓங்குகின்றார்.

சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கும் ஞானக் குழந்தையோ, கண்ணீர் பெருக்கியவாறு, புளகமுற்று, மற்றெவரும் அறியாவண்ணம் விண்மிசை விடைமீது பவளக் குன்றென எழுந்தருளி இருக்கும் உமையொரு பாகனை, வேதங்களாலும் இன்னதென்று சுட்டஇயலாத தேவாதி தேவனை, தெய்வங்களும் தொழுதேத்தும் தனிப்பெரும் தெய்வத்தை, பிறைமதிப் பரம்பொருளை 'இதோ இப்பெருமானே எனை ஆட்கொண்டு அருளியது' என்று அண்மைப் பொருளில் சுட்டுகின்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!

திருஞானசம்பந்தர் (திருக்கோலக்காவில் தாளம் பெற்ற அற்புத நிகழ்வு):

அம்மையப்பரிடமிருந்து ஞானப்பாலுண்ட நிகழ்வினையடுத்து சம்பந்த மூர்த்தி சீர்காழி ஆலயத்துள் சென்று "நறவ நிறை வண்டறை' எனும் மற்றொரு திருப்பதிகத்தால் சிவமூர்த்தியைத் தொழுதுப் பின் தந்தையாருடன் இல்லம் வந்தடைகின்றார். அன்றிரவு சிவபெருமானின் திருவருளினை இடையறாது நினைந்தவாறே துயில்கின்றார். பொழுது புலர்ந்ததும், கணநேரமும் தாமதிக்காது, நியமங்களை முடித்துப் பின்னர் தொண்டர் குழாமும் உடன்வர, தந்தையாருடன் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா எனும் தலத்திற்குச் செல்கின்றார். ஆலயத்தை வலம் வந்துக் கருவறையில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கும் சப்தபுரீஸ்வரரைப் பணிகின்றார்.

'மடையில் வாளைபாய' எனும் முதல் திருப்பாடலைத் தம்முடைய கரங்களால் தாளமிட்டவாறே பாடுகின்றார், சிவஞானக் குழந்தையின் பிஞ்சுப் பொற்கரங்கள் நோக, சிவபெருமானும் அம்பிகையும் பொறுப்பரோ! சம்பந்த மூர்த்தியின் கரங்களில் திருஐந்தெழுத்து பொறிக்கப் பெற்ற பொன்னாலாகிய தாளமொன்று வந்து சேர்கின்றது. திருவருளை வியந்து போற்றியவாறே சிவப்பிரசாதமான அத்தாளத்தை முழக்கித் திருப்பதிகத்தின் மற்ற திருப்பாடல்களையும் நிறைவு செய்கின்றார்.

முக்கண் முதல்வர் அருளிய தாளத்தில் எழும் சிவநாதத்தினைக் கேட்டு விண்ணவரும், நாரதரும், தும்புருவும் வியந்து போற்றிப் பணிகின்றனர். சீகாழிக்கு மீண்டும் திருப்பாதங்கள் நோக நடந்து செல்ல முனையும் சம்பந்தச் செல்வரைத் தந்தையார் தம்முடைய தோள்மீது சுமந்துச் செல்கின்றார்.

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காஉளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம்என்கொலோ!!!

திருஞானசம்பந்தர் (திருநனிபள்ளி யாத்திரை):

திருநனிபள்ளி எனும் தலத்தில் வாழும் அன்பர்கள் பலரும் ஒன்று கூடிச் சீர்காழி சென்று ஞானசம்பந்த மூர்த்தியை வணங்கி 'தாம் எங்கள் தலத்திற்கு வருகை புரிந்து அங்கு எழுந்தருளியுள்ள நற்றுணையப்பரை வணங்குதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். ஞானசம்பந்தரை ஈன்ற பகவதி அம்மையாரின் அவதாரத் தலம் 'நனிபள்ளி', சீர்காழியிலிருந்து 17 கி.மீ பயணத் தொலைவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரும் அதற்கு இசைந்துத் தந்தையாரின் தோள்களில் அமர்ந்தவாறே, தொண்டர்களும் உடன்வர நனிபள்ளி நோக்கிப் பயணிக்கின்றார். 

நனிபள்ளியின் எல்லையை நெருங்கிய நிலையில், 'இரு மருங்கிலும் விண்ணுயர் மலர்ச்சோலைகளோடு அழகுற அமைந்துள்ள இத்தலத்தின் பெயர் என்ன?' என்று 3 வயது ஞானக் குழந்தையான சம்பந்தச் செல்வர் வினவ, தந்தையாரான சிவபாதரும் பெருமகிழ்வுடன் 'இதுவே நனிபள்ளி' என்று சுட்டுகின்றார். உடன் அந்நிலையிலேயே, தந்தையாரின் தோள் மீது அமர்ந்த வண்ணம் 'காரைகள் கூகை' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் நனிபள்ளி இறைவரைப் போற்றுகின்றார், 
-
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மும் சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைகள்ஆரல் வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

'ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் நிறைவு செய்தருளிய நான்கு திருப்பதிகங்களுள் நனிபள்ளியும் ஒன்றாகும் (மற்றவை கோளறு பதிகம், திருவேதிகுடி மற்றும் திருக்கழுமலத் திருப்பதிகங்கள்).

பின்னர் ஆலயத்தினை அடைந்து, உட்சென்று, நனிபள்ளி நாதரைக் காதலுடன் தொழுதுப் போற்றி செய்துப் பின் அத்தலத்திலேயே சிறிது காலம் தங்கி இருக்கின்றார். 

திருஞானசம்பந்தரைப் போற்றும் தேனினும் இனிய பெரியபுராணப் பாடல்கள்:

ஞானப்பாலுண்ட நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வழியில், 3ஆம் வயதிற்குள் அடியெடுத்து வைத்திருந்த சிவஞானக் குழந்தையினைச் சீர்காழி வாழ் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வணங்கிப் போற்றும் திருக்காட்சியினைச் சேக்கிழார் பெருமான் பின்வரும் திருப்பாடல்களால் பதிவு செய்கின்றார்,

காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத்து
ஆழிய கடலே, அதனிடைஅமுதே, அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள் பெற்றனை என்பார்.
-
மறைவளர் திருவே, வைதிக நிலையே, வளர்ஞானப்
பொறையணி முகிலே, புகலியர் புகலே, பொருபொன்னித்
துறைபெறு மணியே, சுருதியின்ஒளியே, வெளியேவந்து
இறையவன் உமையாளுடன் அருள்தர எய்தினை என்பார்.
-
புண்ணிய முதலே, புனைமணி அரைஞாணொடு போதும்
கண்ணிறை கதிரே, கலைவளர் மதியே, கவின்மேவும்
பண்ணியல் கதியே, பருவமதொரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்அருள் பெற்றனை என்பார்.